பக்கம் எண் :

42 தம்மபதம்

150.

கல்வியில்லாதவன் மாடுபோல் முதிர்ந்து வளர்கிறான்; அவனுடைய ஊன்தான் பெருகுகிறது, ஆனால் அறிவு வளர்வதில்லை.

(7)
 
  
151.

பலவிதமான பிறவிகளை நான் எடுத்தாயிற்று- இந்த (உடலாகிய) குடிலைக் கட்டியவனை நான் இரவும் பகலும் தேடியும் காணவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பது துக்கமாகவேயுள்ளது.

(8)
 
  
152.

குடிலைக் கட்டிய கொற்றனே1 இப்போது உன்னைக் கண்டுகொண்டேன்! குடிலை மறுபடி நீகட்ட முடியாது. உன்னுடைய உத்திரங்கள் எல்லாம் உடைந்துவிட்டன. குடிலின் முகடும் குலைந்து விட்டது. என் சித்தம் நிருவாணப் பேற்றில் இலயித்து விட்டது; (அதனால்) ஆசைகள் அவிந்தொழிந்து விட்டன!.

(9)
 
  
153.

இளமையிலே பிரம்மசரியத்தைப் பேணாதவரும்,செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவரும், மீன்களில்லாத குளத்தில் இரை தேடிக் காத்திருக்கும் கிழக் கொக்குப் போலத் தவிப்பார்கள்.

(10)
 
  
154.

இளமையிலேயே பிரம்மசரியத்தைப் பேணாதவரும், செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவரும்,உளுத்துப்போன விற்களைப்போல், பழமையை எண்ணி எண்ணிப் பரிதவிப்பார்கள்.

(11)

 


1கொற்றன்-ஆசையே இங்குக் கொற்றனாகக் கூறப்படுகிறது.