பக்கம் எண் :

94 தம்மபதம்

416.

இன்பமானவற்றையும், துன்பமானவற்றையும் கைவிட்டு அமைதி பெற்றவன், (மறு பிறப்புக்குக்காரணமான கர்ம) வித்துக்களை ஒதுக்கியவன்,சகல உலகங்களையும் வென்ற வீரன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.

(36)
 
  
417.

எங்கும் உயிர்கள் அழிவதையும், அவைகளின் தோற்றத்தையும் அறிந்தவன், பற்றற்றவன், நல்வழி நடப்பவன், போதியடைந்தவன் எவனோ,அவனையே நான் பிராமணன் என்று சொல் வேன்.

(37)
 
  
418.

எவனுடைய பாதையைத் தேவர்களும், கந்தர்வர்களும், மானிடர்களும் அறியார்களோ, எவன் குறைகள் நீங்கி அருகத் நிலையை அடைந்துவிட்டானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.

(38)
 
  
419.

எவனுக்கு முன்னாலும், பின்னாலும், இடையிலும் எதுவும் இல்லையோ; எப்பொருளுமின்றி எவ்விதப் பற்று மின்றியிருக்கிறானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.

(39)
 
  
420.

காளைபோல் வீரமுள்ளவன், பெருந்தன்மை யுள்ளவன், தீரன் ஞான முனிவன், (மரணத்தை) வென்றவன், பாவமற்றவன், கல்வியில் பூர்த்தி பெற்றவன், போதியடைந்தவன்1 எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.

(40)
 
  
421.

தன்னுடைய முந்திய ஜன்மங்களை அறிந்தவன், சுவர்க்கத்தையும், நரகத்தையும் அறிந்தவன், பிறவிகளின் எல்லையை அடைந்தவன், அறிவு நிறைந்த முனிவன், நிறைவேற்ற வேண்டியவை அனைத்தையும் நிறைவேற்றி முடித்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.

(41)

 

தம்ம பதம் முற்றிற்று


1போதி-பூர்ண ஞானம்.