‘கல்விப்பயன் பிறவிப்பிணி தீர்த்தலே’ என்ற எண்ணம் முன்னைப் பிறப்பில் செய்த தவத்தான் கைவரப்பெற்ற இவ்வாசிரியர், திருவாவடுதுறையாதீனத்தை அடைந்து, சைவ சித்தாந்த நூல்கள் பலவும் உளங்கொண்டு கற்றுச் சைவ தீட்சை முதலியன பெற்றுத் துறவியாகி, பல்லாண்டுகள் தம் குருமகாசந்நிதானமாக வீற்றிருந்த அம்பலவாண தேசிகருக்கு அணுக்கத் தொண்டுபுரிந்து தமக்கும் பிறருக்கும் பயன்தருவனவாகிய கோயில்விழாக்களைக் குறைவின்றி நடத்திப் பூசைகளைச் சிறப்பித்து, பின் அவர் அருளாணையின்வழி ஒழுகி ஈசானதேசிகர் என்ற தீட்சாநாமத்துடன் திருநெல்வேலி ஈசான மடத்துத் தலைவராய்ப் பல்லாண்டுகள் தொண்டாற்றிவந்தார். இவர் தமக்கும் பிறருக்கும் பயன்சாரா அட்டமா சித்திகளை அருமையாய்த் தேடுவதில் காலம் கழித்தாரல்லர். அக்காலத்தில் வைத்தியநாத தேசிகரின் இலக்கண விளக்கமும் சுப்பிரமணிய தீட்சிதரின் பிரயோகவிவேகமும் ஆசிரியர்தம் உரையொடு வெளிவாரா நின்ற செய்தியைக் கண்ணுற்று, ‘தமிழில் உள்ள அரிய இலக்கண விதிகளை உலகநடை எடுத்துக்காட்டுக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு வெளியிடின், பேரறிவோர் பிற நலனுக்குச் செய்த தொண்டாக என்றும் உலகிற்குப் பயன்படுமே, என்ற அருளுள்ளத்தால், வடமொழியில் சொல்லிலக்கணமே சிறப்பாக இலக்கணம் என்ற பெயரில் போற்றப்படுவதனை உட்கொண்டு, தாமும் தமிழின் சொல்லிலக்கணச் செய்திகளுள் அரியன பலவற்றைத் தொகுத்துப் பாயிரம் நீங்கலான வேற்றுமையியல் - வினையியல் - ஒழிபியல் - என்ற மூன்று இயல்களைக்கொண்ட இலக்கணக் கொத்து என்ற நூலை உரையுடன் யாத்தார். இலக்கண இலக்கியங்களை முறையே கற்று வல்லவர்களுக்கு ஏற்படும் ஐயங்களை அகற்றக் கூடிய நிலையில் 131 நூற்பாக்களைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. இவ்வாசிரியர் தசகாரியம் முதலிய ஞான நூல்களையும் செந்தில்கலம்பகம் முதலிய பிரபந்தங்களையும் யாத்தாராயினும், இவருக்கு இறவாப் புகழ் தந்து விளங்குவது இவ்விலக்கணக் கொத்து நூலேயாகும். |