இவர் தாம் ஈசான மடத்துத் தலைவராய் வீற்றிருந்த காலத்துச் சங்கரநமசிவாயப் புலவர் முதலியவர்களுக்கு இயற்றமிழை ஐயந்திரிபு அறக் கற்பித்துப் பின் ஞான நூல்களையும் உபதேசித்த போதகாசிரியராகவும் ஞானாசிரியராகவும் விளங்கி, முதுமையில் இறைவன் திருவடியை எய்தினார். இவர் காலத்து இலக்கணவிளக்க நூலுக்குச் சூறாவளி வரைந்த சிவஞான முனிவர், நன்னூல் விருத்தியின் வேற்றுமை வினை பற்றிய பகுதிகளில் இவருடைய இலக்கணக் கொத்துச் செய்திகள் பலவற்றையும் எடுத்து மொழிந்தமை ஒன்றே, இவர் புலமை அனைவரும் பாராட்டுதற்குரித்தாயிருப்பதற்குச் சான்று பகரும். இவர்தம் புகழ் வாழ்க! |