பக்கம் எண் :

10எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

தொழில்கள்; நீர்வளமுள்ள நிலப்பகுதிகளின் இயற்கை வளம்; உழவுத் தொழிலின் உயர்வு; நகரங்களின் காட்சி; ஊர்களின் அமைப்பு; பலதிறப்பட்ட மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறியலாம். இவைபோன்ற பல செய்திகள் அகப்பொருள் நூல்களிலே கூறப்படுகின்றன.

புறப்பொருள்

கண்ணாற் கண்டு வாயால் விளக்கிச் சொல்லக்கூடிய செய்திகள் அனைத்தும் புறப்பொருளிலே அடங்கும். அரசர்களுடைய போர்முறை; அவர்களுடைய ஆட்சியின் பெருமை; அவர்களுடைய வீரம், கொடை, புகழ், வரலாறு ஆகியவைகள் எல்லாம் புறப்பொருளில் அடங்கும். வாணிகம், கைத்தொழில், நீதி ஆகியவைகளும் புறத்திணைச் செய்திகளே. புறத்திணை நூல்களிலே, அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள் ஆகியோர் வரலாறுகளையும் அறியலாம்.

அகத்திணையை ஏழு திணைகளாக அமைத்திருப்பது போலவே புறத்திணையையும் ஏழு திணைகளாக அமைத்திருக்கின்றனர். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பவை.

போர் செய்யக்கருதிய வேந்தன் எதிரியின் பசுமந்தையைக் கவர்வது; கவர்ந்த பசுமந்ததையை எதிரி மீட்டுக் கொள்வது; இவை வெட்சித்திணை.

ஒரு மன்னன் தன் பகைவனுடைய நாட்டின் மேல் படையெடுத்துச் செல்லுதல்; பகைவன் அவனை எதிர்த்துப் போர்செய்தல்; வஞ்சித்திணை.

பகைவனுடைய கோட்டைமதிலை வளைத்துக் கொள்ளுவது; கோட்டைக்குள்ளிருக்கும் மன்னன் தன் கோட்டைமதிலைக் கைவிடாமல் காப்பாற்றுவது; உழிஞைத்திணை.