பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்11

தன்மேல் படையெடுத்து வந்த அரசனுடன் எதிர்த்துப் போர்செய்து அவனை அழிப்பது தும்பைத்திணை. இது தற்பாதுகாப்புப் போராகும்.

பகைவருடன் போர்செய்து வெற்றிபெறுவது வாகைத் திணையாகும்.

உலக நிலையாமையை எடுத்துக் கூறுவது; நன்னெறியிலே நடக்கும்படி அறிவுறுத்துவது; காஞ்சித்திணை.

ஒருவனுடைய ஒழுக்கம், வீரம், புகழ், கொடை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது பாடாண்திணை. தெய்வங்களின்மேற் பாடுவதும் பாடாண்திணையுள் அடங்கும்.

இவ்வாறு மக்களுடைய வாழ்க்கையை அகவாழ்வு, புறவாழ்வு என்று இரண்டு வகையுள் அடக்கியிருக்கின்றனர் தமிழ் நூலோர். அகவாழ்வைப் பற்றிய செய்திகளை அகப்பொருள் என்றும், புறவாழ்வைப்பற்றிய செய்திகளைப் புறப்பொருள் என்றும் கூறுவர். தமிழ் மக்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைக் கூறுவது அகப்பொருள்; தமிழ் மக்களின் பொது வாழ்வைப்பற்றிய செய்திகளையெல்லாம் கூறுவது புறப்பொருள் என்று பொதுவாகக் கூறிவிடலாம்.

கூடா வொழுக்கம்

அகப்பொருட் பாடல்களிலே பரத்தையிற் பிரிவைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. மருதத்திணைப் பாடல்களிலே இதைப்பற்றி விளக்கமாகக் காணலாம்.

காதலன் பரத்தையர்கள் சேரியில் தங்கியிருக்கின்றான்; பரத்தையர்களுடன் கூடி நீராடுகின்றான்; தன் வீட்டில் உள்ள நகைகளைப் பரத்தையர்களுக்குக் கொண்டு போய்க்