| 12 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
கொடுக்கின்றான்; பரத்தையர் அவனைத் தேடிக் கொண்டு அவன் மனைவி வாழும் வீட்டுக்கே வந்துவிடுகின்றனர். இவைபோன்ற பல செய்திகள் கூறப்படுகின்றன. மருத நிலந்தான் செல்வங் கொழிக்கும் சிறந்த நிலம்; அரசும் வாணிகமும் தொழில்களும் ஒழுங்காக நடைபெறும் நாகரிகம் நிறைந்த நிலம். இந்த நிலத்தில் வாழ்ந்த செல்வக்குடி மக்களே இந்தக் கூடா ஒழுக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இந்தச் செல்வக் குடியினர் பெருநிலக்கிழவர்கள். இவர்களுடைய இன்ப வாழ்க்கைக்காகவே பரத்தையர்-விலைமாதர் என்ற பெண்கள் ஒரு தனிப்பிரிவாக இருந்தனர். இவர்கள் வாழும் இடத்திற்குப் பரத்தையர் சேரி என்று பெயர். பரத்தையர்களிலே காதற்பரத்தையர், சேரிப்பரத்தையர் என்று இருவகையினர் இருந்தனர். ஒருவனையே தன் காதலனாகக் கொண்டு, அவனுடைய வைப்பாட்டியாக வாழ்பவர் காதற்பரத்தையர்; யார் வந்தாலும் பொருள் பெற்றுக் கொண்டு அவர்களுடன் கூடியிருப்பவர் சேரிப்பரத்தையர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் விபச்சாரம் வெளிப்படையாக நடைபெற்று வந்தது. மருதத்திணைப் பாடல்கள் இவ்வுண்மையைக் காட்டுகின்றன. இவ்வொழுக்கத்தை அறிஞர்களும் வெறுத்திருக்கின்றனர். பெண்களும் வெறுத்திருக்கின்றனர். இதனை ஒரு பரிபாடற் பாட்டு மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. குலமகள் ஒருத்தி விலைமகளை வைவதாக அமைந்திருக்கிறது அப்பகுதி. |