நாடு வடுகுமொழி வழங்கும் நாடு; வடுகு மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழி; என்ற உண்மைகளை அகநானூற்றால் அறியலாம். இன்று வேங்கடம் திருமாலின் திருப்பதியாக விளங்குகின்றது. ஆழ்வார்களும், மற்றும் பல அறிஞர்களும் அதன் பெருமையைப் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். அகநானூற்றுப் பாடல்களிலே வேங்கடம் திருமால் எழுந்தருளியிருக்கும் திருப்பதி என்பதற்கான சான்றுகள் காணப்படவில்லை. மலையின் செல்வமும் செழிப்புந்தான் பாராட்டப்பட்டிருக்கின்றன. புறநானூற்றிலும் நான்கு பாடல்களில் வேங்கடவரையைப் பற்றிக் காணப்படுகின்றது. அப்பாடல்களிலும் அது ஒரு திருமால் திருப்பதி என்பதற்கான சான்றுகள் காணப்படவில்லை. ஆகையால் சங்க காலத்திலே, வேங்கடமலை தெய்வம் குடிகொண்ட திருவேங்கடமாகவோ, திருப்பதியாகவோ விளங்கவில்லை என்று எண்ண இடந்தருகின்றது. ஆரியர்கள் வடநாட்டினரை ஆரியர்கள் என்ற பெயரால் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அகநானூற்றிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டு மன்னர்களுக்கும், வடநாட்டு மன்னர்களுக்கும் சங்க காலத்திற்கு முன்பே பல போர்கள் நடந்திருக்கின்றன. தமிழர்களும் வடநாட்டின் மேல் படையெடுத்திருக்கின்றனர். ஆரியர்களும் தமிழ் நாட்டின்மேல் படையெடுத்திருக்கின்றனர். ஆரியர்-தமிழர் போராட்டங்களுக்கு இனவெறியோ, மதவெறியோ, கலாசார வெறியோ காரணங்கள் அல்ல. தமிழ்நாட்டு மன்னர்கள்-சேர, சோழ, பாண்டியர்கள்-அடிக்கடி |