பக்கம் எண் :

6எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

நூல்களிலே பரிபாடலும், கலித்தொகையும் பாடல் வகையால் வேறுபட்டவை. அவைகள் தனித்தனி நூல்களாக அமைந்திருப்பது பொருந்தும். ஐங்குறு நூறு ஐந்து புலவர்களால் பாடப்பட்டவை. ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு நூறு பாடல்களைத் தனித்தனியே பாடியிருக்கின்றனர். ஆதலால் அந்நூலும் தனி நூலாக அமைந்திருப்பதும் ஏற்றதே. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு மூன்றும் ஒரேவகைப் பாடல்களால் ஆனவை; ஒருபொருளைப் பற்றியே கூறுவன. இவைகளை ஏன் தனித்தனி நூல்களாக அமைக்கவேண்டும்? மூன்றையும் ஒரே நூலாக அமைந்திருந்தால் என்ன? இவ் வையங்கள் எழுவது இயற்கை.

பாடல்களின் சுருக்கம், பெருக்கம் கருதியே மூன்று தனித்தனி நூல்களாக அமைத்தனர். நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு மூன்றையும் ஒன்று சேர்த்தால் ஆயிரத்து இருநூறு பாடல்களாகும்; படிப்போர்க்குச் சலிப்பு தோன்றும்; அன்றியும் சிறிய பாடல்களும் பெரிய பாடல்களும் கலந்து மேடு பள்ளங்களைப் போலக் காணப்படும். ஆகையால்தான் ஒரே செய்தியைப் பற்றிக் கூறும் ஒரே வகையான பாடல்களை மூன்று நூல்களாகப் பிரித்தனர் என்று கொள்ளலாம்.

நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரையில் உள்ள பாடல்களை ஒன்றாகத் தொகுத்துக் குறுந்தொகையாக்கினர்.

ஒன்பது அடிகள் முதல் பன்னிரண்டு அடிகள் வரையில் அமைந்த ஆசிரியப்பாக்களைத் தொகுத்து நற்றிணையாக்கினார்.

பதின்மூன்று அடிமுதல் முப்பத்தோரு அடிகள் வரையில் அமைந்த ஆசிரியப்பாக்களைத் தொகுத்து அக நானூறாக்கினார். இந்த அகநானூற்றுக்கு நெடுந்தொகையென்ற மற்றொரு பெயரும் உண்டு.