இவ்வாறு செய்யுட்களின் நீளம், குறுக்கம் கருதியே தனித்தனி நூல்களாக்கினர் என்பதில் ஐயமில்லை. ஐங்குறு நூறு மூன்று அடிமுதல் ஆறு அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாக்களின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அகப்பொருள் அகப்பொருள் என்பது மனத்தால் சுவைத்து மகிழ்ச்சியடைவது. சொற்களால் வெளிப்படையாக விளம்பமுடியாமல் உள்ளத்தால் சுவைத்து இன்புறுவது. ஆண் பெண்கள் இருவரும் சேர்ந்து அடையும் இன்பத்தையே அகப்பொருள் என்று கூறினர். இத்தகைய இன்பத்திற்குக் காரணமான நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லுவதே அகப்பொருளாகும். அகப்பொருளை அகத்திணை என்றும் கூறுவர். திணை-ஒழுக்கம். அகத்திணை-உள்ளத்திலே நிகழும் ஒழுக்கம். இந்த அகத்திணையை ஏழு பகுதியாகப் பிரித்துக் கூறியிருக்கின்றனர். அவை குறிஞ்சித்திணை, பாலைத்திணை, முல்லைத்திணை, நெய்தல்திணை, மருதத்திணை, கைக்கிளைத்திணை, பெருந்திணை என்பவை. இவற்றுள் முதலில் உள்ள ஐந்து திணைகளும், குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்து வகை நிலங்களிலும் நடைபெறுவன. கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் தனி நிலம் இல்லை. மலையும், மலைச்சாரலும் குறிஞ்சி நிலம். இங்குதான் காதலர் இருவர் சந்தித்துக் கருத்திலே ஒன்றுபடுவர். இதற்குக் குறிஞ்சியொழுக்கம் - குறிஞ்சித்திணை என்று பெயர். இக்காதலர்கள் வெளிப்படையாக மணம்புரிந்து கொள்ளும் வரையிலும் அடிக்கடி சந்திப்பார்கள். அவர்கள் இரவிலும், பகலிலும் குறித்த இடத்திலே கூடுவார்கள். |