பக்கம் எண் :

8எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

பாலையென்பது வறண்ட நிலம். காதலன் தன் காதலியை மணப்பதற்கு முன்போ, அல்லது மணந்த பின்போ பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்துபோவான். இதுவே பாலை ஒழுக்கம்; பாலைத் திணை.

காடும் காட்டையடுத்த நிலமும் முல்லை நிலம். பிரிந்துசென்ற கணவன் திரும்பும் வரையிலும் மனைவி பொறுத்துக் கொண்டிருப்பாள். கணவனைப் பற்றி யாரேனும் பழிச்சொற் கூறினாலும் கடிவாள்; மறுத்துரைப்பாள். கணவன் பிரிந்து சென்றதனால் உண்டான உள்ளத் துயரத்தை அடக்கிக் கொண்டிருப்பாள். இதுவே கற்புடைக் காரிகையின் குணம். இத்தகைய நிகழ்ச்சிகளைக் கூறுவதே முல்லை யொழுக்கம்; முல்லைத்திணை.

கடற்கரையும், அதை அடுத்துள்ள பகுதிகளும் நெய்தல் நிலம். மனைவி பிரிந்து சென்ற கணவனை நினைத்து வருந்துவாள்; தன் துக்கத்தை வாய்விட்டுக் கூறுவாள்; அவன் இன்னும் வரவில்லையே என்று ஏங்குவாள்; அவன் பிரிந்து போவதற்கு முன் சொல்லிய உறுதி மொழிகளை எண்ணியும், உரைத்தும், பழித்தும் வருந்துவாள், இவ்வாறு மனைவி தன் வேதனையை வெளிப்படையாகக் காட்டுதல் நெய்தல் ஒழுக்கம்; நெய்தல் திணை. இவ்வளவும் அன்பால் நிகழ்வன.

ஊரும் ஊரைச்சேர்ந்த பகுதியும் மருத நிலம். இங்கே காதலனும் காதலியும் இணைந்து நின்று, புத்திரப்பேறு முதலிய செல்வங்களைப் பெற்றுக் குறைவின்றிக் குடும்பம் நடத்துவர். இல்லற தர்மங்களை யெல்லாம் இனிது நிறைவேற்றுவர். கணவன் பரத்தையர் வீடுகளுக்குச் சென்று வருவதால் காதலன் காதலிகளுக்குள் பிணக்கு ஏற்படும். காதலனுடைய கூடா வொழுக்கத்தைக் காதலி கண்டிப்பாள். இவர்களுடைய ஊடல்கள், பாணர்களாலும்,