பக்கம் எண் :

94எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

தமிழர்கள் இக்கொள்கையிலே நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனை அகநானூற்றிலே காணலாம்; புறநானூற்றிலும் காணலாம்; திருக்குறளிலும் காணலாம்.

‘‘பகைவர்களும் விரும்பத் தகுந்த சிறந்த அறிவினையுடைய மக்களைப் பெற்றெடுத்த நல்லோர்கள் இவ்வுலகத்திலும் புகழுடன் வாழ்வார்கள்; குற்றமில்லாமல் மறுவுலக இன்பத்தையும் அடைவார்கள்; இவ்வாறு பலரும் கூறிய பழைய வார்த்தைகள் எல்லாம் உண்மையாக இருப்பதைக் காணும் வாய்ப்பைப் பெற்றோம்.

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப்பயந்த செம்மலோர், எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனம்’’                                     (பா. 66)

இப்பாடல் ‘‘பிள்ளையில்லார்க்குப் புண்ணியலோகம் இல்லை’’ என்ற பழமொழியை நினைவூட்டுவதைக் காணலாம். புதல்வன் என்ற சொல் அகநானூற்றிலே பல பாடல்களிலே வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

செல்வத்தின் சிறப்பு

இல்லறம் இனிது நடைபெறச் செல்வம் வேண்டும். செல்வத்தைத் தேடும்பொருட்டே தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். பாலைத்திணைப் பாடல்களிலே இக்கருத்தைக் காணலாம்.

கற்புமணம் புரிந்துகொண்டு இல்லறம் நடத்துங் காலத்திலும் காதலன் பொருள் தேடப் புறப்பட்டுப் போவான்.