களவு மணம் நிகழுங் காலத்திலும் ‘‘பொருள் தேடிக் கொண்டு வந்த பின் மணம் செய்து கொள்ளுகிறேன்’’ என்று தலைவிக்கு உறுதிமொழி யளித்துவிட்டுப் பிரிந்து போவான். இதற்கு ‘‘வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்’’ என்று பெயர். செல்வம் இல்லாவிட்டால் இல்லறத்தை நன்றாக நடத்த முடியாது; இல்லற தர்மங்களை நிறைவேற்ற முடியாது. இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். அகநானூற்றுப் பாடல்கள் பலவற்றிலே இதனைக் காணலாம். ‘‘அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் பொருளின் ஆகும்; (பா. 155) பாவங்களைச் செய்யாமல் அறத்தைப் பின்பற்றி நடக்கும் வாழ்க்கையும், ஒரு பொழுதும் பிறனுடைய வீட்டு வாசற்படியிலே போய் நின்று இரக்காத செல்வமும், ஆகிய இரண்டும் பொருளால்தான் உண்டாகும். ’’ ‘‘உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார் நன்றுபுரி காட்சியர் சென்றனர்; (பா. 245) உயிரினும் சிறந்த உயர்ந்த செல்வத்தைத் தேடிக்கொண்டு வரும் பொருட்டு. நன்மை செய்யும் அறிவுடையவர் சென்றார். ‘‘இரப்போர் ஏந்து கை நிறையப், புரப்போர் புலம்பில் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் அரும் பொருள்; (பா-389) பொருளை விரும்பி இரப்பவர்கள் ஏந்திய கைகளிலே நிறையும்படி, புரப்பவர்கள் துன்பமற்ற உள்ளத்துடன் புதிய பொருள்களைக் கொடுத்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான அரிய செல்வம். ’’ |