| 98 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
வறுமைக்காளானபோது அவரை விட்டுப்பிரிதலும் நன்றிகெட்ட தன்மை என்பதை இதனாற் காணலாம். ‘‘இன்பமும், இடும்பையும், புணர்வும், பிரிவும் நன்பகல் அமையமும், இரவும் போல வேறு வேறு இயலவாகி மாறுஎதிர்ந்து உள; (பா. 327) இன்பமும் துன்பமும், கூடுதலும் பிரிதலும், பகலும் இரவும் போன்றவை; இரண்டும் வேறு வேறு தன்மையுடையனவாய் மாறி மாறி வருவன. ’’ இவ்வுண்மையைக் கண்டறிந்தவர்கள் இன்பத்தால் செருக்கடைய மாட்டார்கள்; துன்பத்தால் உள்ளம் சோர்ந்து துடிக்கமாட்டார்கள். இராமாயண பாரதம் சங்ககாலத் தமிழர்கள் இராமாயணத்தைப்பற்றி அறிந்திருந்தனர். இராமாயணக் கதை தமிழ் நாட்டிலே பரவியிருந்தது. பாரதக் கதையும் தமிழர்களுக்குத் தெரிந்ததுதான். இவற்றைச் சங்க நூல்கள் பலவற்றில் காணலாம். அகநானூற்றிலே இராமாயணததைப்பற்றிய குறிப்பும் பாரதத்தைப் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன. ‘‘வென்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை, வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம். (பா. 70) வெல்லுகின்ற வேற்படையையுடைய பாண்டியனது பழமையான தனுக்கோடியிலே-முழங்கிக் கொண்டிருக்கின்ற பெரிய கடலின் அலைகள் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் கடல்துறையிலே-வெல்லுகின்ற போர்த்திறமையையுடைய |