பக்கம் எண் :

10பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

தான் அறிந்தவாறே எடுத்துக் காட்டியிருக்கின்றார். "பத்துப்பாட்டு போன்ற நூல்களிலே மனம் வைத்தவர்கள், எப்படி வேண்டுமானாலும் பொருள் பண்ணக்கூடிய இலக்கணமற்ற வெறும் கற்பனை நூல்களிலே கருத்தையிழப்பார்களா?" என்று கேட்கிறார். இக்கேள்வியின் வழியாகவே பழந்தமிழ்ப் பத்துப்பாட்டின் பெருமையை நமக்கு எடுத்துக் காட்டிவிட்டார்.

பத்துப் பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கு இசையும் இலக்கணமில் கற்பனையே.

பத்துப்பாட்டு இத்தகைய சிறப்புடன் பாராட்டப்படுவதற்குக் காரணம் உண்டு. அப்பாடல்களை எழுதிய பழந்தமிழ்ப் புலவர்கள் பிற்காலத்துப் புலவர்களைப் போன்ற கிணற்றுத் தவளைகள் அல்லர். அவர்கள் வீட்டிற்குள்ளோ, வெளித்திண்ணையிலோ, உட்கார்ந்துகொண்டு சிந்தனை செய்து மட்டும் அச்செய்யுட்களை எழுதவில்லை.

அவர்கள் நாடெங்கும் நடந்து திரிந்தவர்கள்: காடுகளிலும் மலைகளிலும் கால்கடுக்க நடந்தவர்கள்; சிற்றூர்களையும், பேரூர்களையும், ஆறுகளையும், கடலையும் பார்த்துப் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டவர்கள். ஆதலால் அவர்கள் பார்த்த இயற்கைப் பொருள்களைப் பற்றி அவர்கள் பழகிய மக்களைப்பற்றி அவர்கள் தாமே அனுபவித்த இன்ப துன்பங்களைப் பற்றி அப்படியே எழுதியிருக்கின்றனர். ஆதலால்தான் பத்துப்பாட்டு, பொருளறிந்து படிப்போர் மனதைக் கவர்கின்றது.

பத்துப்பாட்டின் நடை கொஞ்சம் கடினமானதுதான்; கற்றறிந்த பண்டிதர்களுக்குக்கூட பத்துப்பாட்டென்றால் சிறிது பயந்தான். தமிழ் கற்க, விரும்பிவரும் ஒருவரைத்