பக்கம் எண் :

நூலின் விளக்கம்11

தமிழின் பக்கமே அணுகுவதற்கு அஞ்சி ஓடும்படி பத்துப்பாட்டைக் கொண்டு விரட்டி விடலாம், "மலைபடுகடாம்" படியுங்கள். நல்ல தமிழ்ப்பயிற்சி பெறலாம்". என்று சொன்னால்போதும். தமிழ் கற்க வந்தவர் வேர்த்து விதிர்த்துப்போய் விடுவார் "அப்பப்பா நமக்கு வேண்டாம் இந்தத் தமிழ்" என்று ஓட்டம் பிடித்துவிடுவார்.

பத்துப்பாட்டிலே பல சொற்கள், பல சொற்றொடர்கள், மலைபடுகடாம் என்பது போலத்தான் கடபுடாவென்று அமைந்திருக்கின்றன. இந்நூல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அக்காலத்தே தமிழ் கற்றோர் பலராலும் படித்துச் சுவைக்கக் கூடிய நிலையில் இருந்திருக்கலாம். இன்று அப்படியில்லை. அந்நூலின் அருமை பெருமைகளைப் புலவர்கள் எடுத்துக்காட்டினால் தான் மற்றவர்கள் சுவைத்து மகிழ முடியும்.

வழக்கிழந்த பல சொற்களைப் பத்துப்பாட்டிலே காணலாம். பண்டைத் தமிழ்ப் புலவர்களின் திறமையைக் காணப் பத்துப்பாட்டு ஒன்றே போதும். இயற்கைப் பொருள்களைப் பற்றி, இயற்கை நிகழ்ச்சிகளைப் பற்றி எப்படி எழுதலாம் என்பதற்கு இந்நூல் ஒரு வழிகாட்டி; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழகத்தை நமக்கு விளக்கிக் காட்டும் ஒரு சொற்சித்திரம். அக்காலத்து மக்களின் நாகரிகத்தை நமக்குக் காட்டுவதற்காக நம்மை அழைத்துச் செல்லும் ஒரு நல்ல பூஞ்சோலை.

பத்துப்பாட்டால் விளங்குவன

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழகத்தில் உணவுப் பஞ்சம் இல்லை. மலைகளிலே, காடுகளிலே, காயும் கனியும் கிழங்கும் மதுவும் ஏராளமாகக் கிடைத்துவந்தன. மலைச்சாரல்களிலும் ஆற்றோரங்களிலும் தினை, வரகு,