பக்கம் எண் :

100பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

இத்தகைய நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுவதே முல்லைத்திணையாம்

ஆசிரியர்

இந்த முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனார். இவர் காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தவரோ, அல்லது வாழ்ந்தவரோ தெரியவில்லை. இவர் தந்தையார் பொன் வாணிகம் செய்தவர். அவர் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பொன் வாணிகனார் என்பதே இவர் தந்தையாரின் பெயர். காரணப்பெயர். இயற்பெயர் தெரியவில்லை. "காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்" என்பது இந்நூலாசிரியருடைய முழுப் பெயர். இப்பெயர் தான், மேற்சொல்லியவாறு எண்ண இடந்தருகின்றது. இவர் இயற்றிய நூல் இது ஒன்றே. இவர் பெயரால் வேறு நூல்களோ பாடல்களோ கிடைக்கவில்லை.

இந்த நூல் யாரைக் குறித்தும் பாடப்பட்டதன்று. இந்தப் பாடலிலே அகத்திணையும் அடக்கம்; புறத்திணையும் அடக்கம். தலைவி, தலைவனைப் பிரிந்து தனித்திருப்பதைப் பற்றிக் கூறுவது அகத்திணை; இது முல்லைத்திணையைச் சேர்ந்தது.

போர்க்களத்தைப் பற்றியும், தலைவன் பாசறையிலே இருப்பதைப் பற்றியும் கூறுவது புறத்திணை. அகவொழுக்கம், புறவொழுக்கம் ஆகிய இரண்டு ஒழுக்கங்களைப் பற்றியும் இப்பாடலில் கூறப்பட்டிருந்தாலும் முதலில் அகவொழுக்கமாகிய முல்லைத் திணையைப் பற்றியே சொல்லப்படுகின்றது. ஆதலால் இதற்கு முல்லைப் பாட்டென்று பெயர் வைக்கப்பட்டது என்று கருதலாம்.