பக்கம் எண் :

முல்லைப்பாட்டு 101

பாட்டின் அமைப்பு

ஒரு வேந்தன் பகைவருடன் போர் செய்யும் பொருட்டுத் தன் காதலியைவிட்டுப் பிரிந்து போகிறான். போகும்போது மாரிக்காலத்தில் மறக்காமல் வந்து விடுவேன் என்று உறுதிமொழியுரைத்துச் செல்லுகின்றான்.

கார்காலம் வந்துவிட்டது. ஆனால் காதலன் திரும்பவில்லை. தலைவி காதலனை எண்ணிக் கலங்குகின்றாள். அவளுடைய அவதியைக் கண்ட அன்னைமார்கள், திருமால் கோயிலுக்குச் சென்று வணங்கி வரம் கேட்டனர். அச்சமயம் வருந்துகின்ற கன்றுகளைப் பார்த்து "தாய்ப்பசுக்கள் விரைவில் வந்துவிடும் என்று ஓர் ஆயர்குலப்பெண் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள். அச்சொல், வணங்கி வரங்கேட்டுக் கொண்டிருந்த அன்னையர் காதிலே விழுந்தது. அவர்கள் அதை நல்ல சகுனமாகக் கருதினர். உடனே தலைவியிடம் வந்து "காதலன் வந்து விடுவான், கலங்காதே" என்று ஆறுதல் மொழிகள் கூறினர். தலைவியும் கண்ணீர் விட்டுக் கொண்டு கணவன் வரவை எதிர்பார்த்திருந்தாள்.

போரின் மேற்சென்ற அரசன் பகைவர்களை வென்று பாடி வீடு அமைத்தான். அந்தப் பாடி வீட்டிலே கூடாரங்கள் பல இருந்தன. அவைகளின் நடுவிலே அரசனுக்கொரு தனிக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.

அரசன் தனது கூடாரத்தில் படுக்கையிலே படுத்துக் கொண்டிருக்கின்றான். பெண்கள், மெய்க்காப்பாளர் யவனர், ஊமையர்களான மிலேச்சர், மன்னன் கூடாரத்தைக் காத்து நிற்கின்றனர். அரசனோ நடந்த போரைப் பற்றி எண்ணிக்கொண்டும் நடக்க வேண்டிய போருக்குத் திட்டமிட்டுக் கொண்டும் படுத்திருக்கின்றான்.