| 6. முல்லைப்பாட்டு பத்துப்பாட்டுள் இது ஐந்தாவது பாட்டு. மிகவும் சுருக்கமானது இந்த முல்லைப்பாட்டுதான். அதன் அடிகள் 103. ஆசிரியப்பாவால் ஆகியது.  முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லுவது முல்லைப்பாட்டு, பிரிந்து சென்ற தலைவன் வரும் வரையிலும் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல் முல்லையொழுக்கம். இந்த முல்லைத்திணையையே கற்பொழுக்கம் என்று சொல்லுவர்.  தலைமகளிடம், மாரிக்காலத்தில் வருவேன் என்று சொல்லிப் பிரிந்து சென்றான் தலைமகன். மாரிக்காலமும் வந்துவிட்டது. தலைமகனைக் காணவில்லை. தலைவி வருந்துகின்றாள். வருந்துகின்ற தலைவிக்கு அவளுடைய தோழி, செவிலித்தாய் முதலியவர்கள் ஆறுதல் கூறுகின்றனர். தலைவியும் தன் காதலன் சொன்ன சொல்லைத் தவறமாட்டான், என்று எண்ணி அவன் வரும் வரையிலும் பொறுத்திருக்கிறாள்.  பிரிந்து சென்ற தலைமகன் மாரிக்காலம் வந்ததைக் கண்டு தலைமகளுக்குத் தந்த வாக்குறுதியை எண்ணுகின்றான். தலைவியைச் சந்திக்க வேண்டும் என்று துடிக்கின்றான். தலைவியைச் சந்தித்த அவளுடன் கலந்து மகிழ்ந்து இல்லறம் நடத்த விரைந்து வருகின்றான்.  |