பக்கம் எண் :

முல்லைப்பாட்டு 107

பார்த்துக் கொள்ளுவார்கள். அவர்கள் தற்பாதுகாப்புக்காக வாளாயுதம் வைத்திருப்பார்கள். இவ்வாறு பெண்கள் போர்க்களத்திலே ஆண்களுக்கு உதவிசெய்து வந்தார்கள்.

“சிறுவளையல்களை முன்கையிலே அணிந்திருக்கின்றனர். அவர்களுடைய தலைமயிர் அவிழ்ந்து முதுகிலே கிடக்கின்றது. இரவைப் பகலாக்கக்கூடிய அவ்வளவு ஒளிபொருந்திய வாளை இடுப்பிலே தொங்கவிட்டிருக்கின்றனர். இத்தகைய வீரப்பெண்கள் எண்ணெய் சிந்துகின்ற குழாய் வடிவமான நீண்ட பந்தத்தைக் கொளுத்திக் கொண்டு திரிகின்றனர். பாவையின் கையிலே எரிகின்ற விளக்கு அணையும் போதெல்லாம் அவைகளை மீண்டும் கொளுத்துகின்றனர்.

குறுந்தொடி முன்கைக், கூந்தல் அம் சிறுபுறத்து,
இரவு பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவு வரிக்கச்சின் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் சரையர், நெடுந்திரிக் கொளீஇக்,
கையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட.           (45-49)

இதனால் பண்டைக் காலத்தில் பெண்களும் போர்க்களம் புகுந்தனர்; வாள் யுத்தம் செய்யும் வல்லமையும் பெற்றிருந்தனர் என்று அறியலாம்.

அந்நிய நாட்டினர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது நாட்டில் அந்நிய நாட்டினர் பலர் குடிபுகுந்திருந்தனர். அவர்கள் வாணிகர்களாகவும் வாழ்ந்தனர்; அரசர்களிடம் பணியாட்களாகவும் வேலை புரிந்துவந்தனர். கிரேக்க நாட்டு மக்களுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் தொடர்பிருந்தது. இச்செய்திகளைச் சங்க இலக்கியங்களிலே காண்கிறோம்.