| 108 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
கிரேக்க நாட்டினரைத் தமிழர்கள் “யவனர்” என்ற பெயரால் அழைத்தனர். பாசறையிலே அரசனுக்குக் காவலாயிருந்த யவனரைப்பற்றி முல்லைப் பாட்டாசிரியர் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். “சட்டையணிந்தவர்கள்; கண்டோர் நெஞ்சிலே கலக்கத்தை உண்டாக்கும் தோற்றமுடையவர்கள்; ஆற்றல் அமைந்த ஆக்கையினர்; ஆருக்கும் அஞ்சாத ஆண்மையுடைய கன்னெஞ்சர்.” மெய்ப்பைபுக்க, வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை, வன்கண் யவனர்; (60 - 61) இது யவனரைப் பற்றிய குறிப்பு அக்காலத்தில் அரசர்கள் தமது அந்தப்புரத்தில் அந்நிய நாட்டு ஊமையர்களையே காவலாக வைத்திருப்பார்கள். அந்தப்புர இரகசியங்கள் வெளிப்படாமலிருப்பதற்காகவே இப்படிச் செய்வர். இத்தகைய அந்நிய நாட்டினரை “மிலேச்சர்’ என்னும் பெயரால் அழைத்தனர். “உடம்பில் உள்ள கண், கை, கால் முதலிய உறுப்புக்களின் மூலமாகவே தம் உள்ளக்கருத்தை உரைப்பார்கள்; வாயால் பேசும் வல்லமையற்றவர்கள்; சட்டை போட்டவர்கள்; அந்நிய நாட்டினர்; பக்கத்திலே காவலாக நிற்கின்றனர்.” உடம்பின் உரைக்கும், உரையா நாவின் படம்புகு மிலேச்சர், உழையராக; (65-66) இவ்வடிகள் மேலே கூறிய செய்தியை விளக்குவன. யவனர், மிலேச்சர் ஆகியோர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழகத்தில் வாழ்ந்து வந்தனர் என்பதை இவ்வாறு கூறுகிறது முல்லைப்பாட்டு. |