112 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
மாங்குடி மருதன் என்னும் மாபெரும் புலவரைத் தலைவராகக் கொண்ட புலவர்கள்; பலரும் பாராட்டும்படி உலகமுள்ளளவும் நிலைத்திருக்கின்ற புகழ்பெற்ற புலவர்கள் என்ற புறநானூற்றுப் பாடலால் இவர் பெருமையை அறியலாம், இவர் செய்த நுால் மதுரைக்காஞ்சி ஒன்றுதான். அகநானுாற்றிலே ஒருபாட்டு. குறுந்தொகையில் மூன்றுபாடல்கள், நற்றிணையில் இரண்டுபாடல்கள், புறநானூற்றிலே ஆறு பாடல்கள், இவர் பாடியவை, திருவள்ளுவமாலையிலும் இவர் பெயரால் ஒருபாட்டு உண்டு, மதுரைக்காஞ்சி ஒன்றே இவருடைய புலமைத் திறத்தை விளக்கப் போதுமானதாகும், பாண்டியர் ஆண்ட பண்டைத் தமிழ் மதுரையை-ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த மதுரையை-அப்படியே படமாக எழுதிக்காட்டுவதைப்போல இந்நூலிலே எடுத்துக் கூறியிருக்கின்றார். பாட்டின் தலைவன் இந்நூல் பாண்டியன் நெடுஞ்செழியன்மேல் பாடப்பட்டது, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்; பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்; நெடுஞ்செழியன்; பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர்களால் இவன் குறிக்கப்படுகிறான். இப்பாண்டியன், யானைக் கட்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்ற சேரமன்னனுடன் தலையாலங்கானம் என்ற இடத்திலே போர் செய்தான். அவனை வென்று சிறைப்படுத்தினான். இவனை எதிர்த்த மற்றும்பல மன்னர்களையும் வென்றான்; இதனால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயர் பெற்றான். |