பக்கம் எண் :

மதுரைக்காஞ்சி115

படிப்போர் இதன் சொற்சுவை, பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புறுவார்கள். பழந்தமிழ் மதுரையில் சுற்றித் திரிவது போலவே கனவு காண்பார்கள்.

தமிழ் மன்னர்கள்

தனியதிகாரம் படைத்தவர்களே பண்டைத் தமிழ் மன்னர்கள். ஆயினும் அவர்கள் குடிகளின் குறையற்ற வாழ்வே தங்களுடைய நல்வாழ்வென நம்பினர். நாட்டிலே செல்வம் செழிக்க-உணவுப் பொருள்கள் ஏராளமாக உற்பத்தியாக-குடிமக்களுடன் ஒத்துழைப்பதே தங்கள் முதற் கடமையெனக் கொண்டிருந்தனர். பாண்டியர்களின் ஆட்சிப் பெருமையைக் கூறும்போது இந்நூலாசிரியர் இக்கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

வற்றாமல் வானமழை பொழிந்தது. உழவுத் தொழில் ஓங்கி வளர்ந்தது; எல்லாத் திசைகளும் செழித்திருந்தன, விதைத்த ஒரே விதையிலே ஆயிரக்கணக்கான தானியங்கள் விளைந்தன; விளைநிலங்களும், மரங்களும் ஏராளமான பயனைத் தந்து சிறந்தன; மக்கள் பசியும் நோயும் இல்லாமல் அழகுடன் மகிழ்ந்து வாழ்ந்தனர்; இவ்வாறு பாண்டிய மன்னர்களின் அரசியல் சிறப்பால் பாண்டிய நாடு சிறந்திருந்ததைப்பற்றி எடுத்த எடுப்பிலேயே கூறப்படுகின்றது, இதனை

மழை தொழில் உதவ, மாதிரம் கொழுக்கத்,
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த,
நோயிகந்து நோக்கு விளங்க;                         (10-13)

என்ற அடிகளால் காணலாம்.

தமிழ் மன்னர்கள் தங்கள் எதிரிகளுடன்தான் போர் செய்வார்கள். அவர்கள் அகந்தையை அழிப்பார்கள். செல்வத்தைக் கொள்ளை கொள்ளுவார்கள். எதிரிகளுக்குத் துணையாக