பக்கம் எண் :

116பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

இருக்கும் எல்லாவற்றையும் கல்லி எறிவார்கள். தங்கள் எதிரிகள் நாட்டுக் குடிமக்களுக்கு எவ்வித இன்னலும் இழைக்க மாட்டார்கள். தங்கள் ஆட்சிக்குள்ளான எதிரிகள் நாட்டையும் தங்களுடைய நாட்டைப்போலவே சீ்ர்திருத்திப் பாதுகாப்பார்கள்.

பகைவர்களின் உள்நாடுகளிலே புகுந்து அவர்களுக்குப் பாதுகாப்பாக உள்ளவைகளையெல்லாம் பிடித்துக் கொள்ளுவாய்; பிடித்துக் கொண்ட அந்தப் பகைவர்களுடைய நாடுகளிலே பல்லாண்டுகள் தங்கியிருப்பாய். அந்நாடுகள் மேன்மையடைய வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்வாய். இத்தகைய சிறப்பும் போர்த்திறமும் பொருந்திய பெருமையுடையவனே.

அகநாடு புக்கு அவர் அருப்பம் வௌவி,
யாண்டுபல கழிய வேண்டுபுலத்து இறுத்து,
மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில்         (140-151)

இப்பகுதி மேலே கூறிய செய்தியை விளக்கும். தமிழ் மன்னர்கள் அழிப்பு வேலை மட்டும் செய்பவர்கள் அல்லர்; ஆக்கவேலை செய்வதிலும் அறிவைச் செலுத்தினர்.

ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்

இந்நூல் தோன்றுவதற்கு முன்னிருந்தே பாண்டிய நாட்டுப் பொருள்கள், பலவேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. சிறப்பாக முத்து, சங்கு வளையல்கள் பலவகையான தானியங்கள், இனிய புளி, வெண்மையான உப்பு, காய்ந்த மீன்கள் ஆகியவை கப்பல்களின் மூலம் அனுப்பப்பட்டன. இந்நாட்டிலே அந்நிய நாட்டுக் குதிரைகள் வந்து இறங்கின.