பக்கம் எண் :

மதுரைக்காஞ்சி117

முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்,
அரம்போழ்ந்து அறுத்த கண்ணேர் இலங்குவளைப்
பரதர் தந்த பல்வேறு கூலம்,
இரும்கழிச் செறுவில் தீம்புளி, வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத்திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல்,
விழுமிய நாவாய் பெருநீ்ர் ஓச்சுநர்
நனந்தலைத்தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழி வழி சிறப்ப”            (315-328)

நெய்தல் நிலத்தைப் பற்றிக் கூறும்போது இவ்வாறு பாடி இருக்கின்றார். இதனால் பாண்டிய நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நடந்த கடற்கரை வியாபாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுகின்றோம்.

வையை நதி

அக்காலத்து வையை நதி இக்காலத்து வையையைப் போல வருநீரின்றி வறண்டு கிடக்கவில்லை. வற்றாத நீர்ப் பெருக்குடன் காட்சியளித்தது. அதன் கரைகளில் உள்ள கோங்கு முதலிய மரங்களின் மலர்கள் வையை வெள்ளத்திலே உதிர்ந்து மாலைபோல மிதந்து செல்லுகின்றன. வையைத் துறைகளிலே பல பூந்தோட்டங்கள் உண்டு. அவைகளிலே பாணர்கள் குடியிருந்து வருகின்றனர். இவ்வாறு வையையைப் பற்றிக் கூறுகின்றது. இதனை

தாது சூழ்கோங்கின் பூ மலர்தா அய்க்
கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல்,
அவிர் அறல் வையைத் துறை துறை தோறும்,
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி,
அழுந்து பட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்           (338-342)

இவ்வடிகள் வையையின் நீர்வளத்தைக் காட்டுகின்றன.