| 118 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
மதுரை மாநகர் மதுரை நகரைச் சுற்றிலும் ஆழமான அகழியிருந்தது. அது கீழே மண்ணுள்ள வரையிலும் தோண்டப்பட்டிருந்தது. நீர் நிரம்பியிருந்தது. வானத்தைத் தொடும்படி உயர்ந்த மதில் மதுரையைச் சுற்றியிருந்தது. அந்த மதிலின் மேல் நகரப் பாதுகாவலுக்காகப் பல படைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கோட்டை மதிலின் வாயில் பழமையானது. யாராலும் அசைக்க முடியாத வலிமையுடையது. அந்த வாயிலின் நிலையிலே-அதாவது வாசற்காலிலே காவல் தெய்வம் குடிகொண்டிருந்தது. அதன் கதவுகள் வலிமையானவை. இடுக்கில்லாமல் இணைத்துச் செய்யப்பட்டவை. கதவைச் சரளமாகத் திறப்பதற்கும் பூட்டுவதற்கும் அடிக்கடி எண்ணெய் பூசுவர். அதனால் அக்கதவுகள் கருமை நிறமுடன் காட்சியளித்தன. கோட்டை வாசலுக்கு மேலே உயர்ந்த மாடி இருந்தது. வானத்தில் செல்லும் மேகங்கள் வந்து படியும்படியான அவ்வளவு உயரமான மாடி அது. வையை ஆற்றிலே எப்பொழுதும் நீர் ஓடிக் கொண்டேயிருப்பது போல் அக்கோட்டை வாயிலின் வழியே மக்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர். மற்றும் பல ஊர்திகளும், விலங்குகளும் போய் வந்து கொண்டிருந்தன. மதுரையின் வெளிப்புறத் தோற்றம் இவ்வாறு இருந்தது. நகருக்குள்ளே பல பெரிய வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கூடம், தாழ்வாரம், சமையற்கட்டு, விருந்தினர் அறை, படுக்கையறை போன்ற பல பகுதிகள் இருந்தன, அந்த வீடுகள் ஆகாயத்தை அளாவியிருந்தன; நல்ல காற்று வீசும்படியான பல சாளரங்களும் அந்த வீடுகளிலே அமைக்கப்பட்டிருந்தன. அந்நகரின் வீதிகள் அகலமானவை; நீளமானவை. அவைகளின் தோற்றம் உயர்ந்த இருகரைகளுக்கும் |