பக்கம் எண் :

122பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

சமண முனிவர்கள், புத்த சந்நியாசிகள் வாழும் இடங்களையே குறித்தது. அவர்கள் தாங்கள் வாழும் இடங்களிலிருந்து கொண்டு, தங்களைக் காண வருவோர்க்கு அறவுரைகளைப் போதித்து வந்தனர். இவ்வாறு போதனை நடைபெற்ற இடத்தைப் பள்ளிகள் என்று வழங்கியதனால் பிற்காலத்தில் கல்வி போதிக்கும் பாடசாலைகளையும் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் என்ற பெயரால் வழங்கினர்.

மதுரையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே பவுத்தர் பள்ளிகள் இருந்தன. சமணர் பள்ளிகள் இருந்தன. அவைகளிலே பவுத்தத் துறவிகளும், சமணத் துறவிகளும் வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் மத தர்மங்களைப் போதித்து வந்தனர்.

அக்காலத்திலே மதுரையிலே பவுத்த-சமணப் பள்ளிகளைப் போல அந்தணர்பள்ளி இருந்ததாகவும் இவ்வாசிரியர் கூறுகிறார். இது ஒரு புதிய செய்தி. சமணத் துறவிகளைப் போல, பவுத்தத் துறவிகளைப்போல, தமிழ்நாட்டு அந்தணர்களிலும் துறவிகள் இருந்தார்கள்; அவர்கள் வேத வேதாந்தங்களைப் போதித்து வந்தார்கள் என்ற உண்மையை இதன்மூலம் காணலாம்.

சிறந்த வேதங்களைப் பொருள் விளங்கும்படி பாடுவார்கள். மற்றவர்கள் பின்பற்றும்படி சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்வார்கள். அறிவிலும், ஒழுக்கத்திலும் அவர்களுக்கு இணையாக இவ்வுலகில் வேறு யாரையும் சொல்ல முடியாது. அவர்களுக்கு இணை அவர்களேதாம். உயர்ந்த உலகத்தை இங்கிருந்தபடியே பெறக்கூடிய சிறந்த அறநெறியைத் தவறாமல் மேற்கொண்டவர்கள். எல்லோர்பாலும் இரக்கங் காட்டும் இளகிய நெஞ்சம் படைத்தவர்கள். மலையை மாளிகையாகச் செய்தது போன்ற பள்ளியிலே இவர்கள் வாழ்கின்றனர். இதுவே அந்தணர்பள்ளி.