சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச்சீர் எய்திய ஒழுக்க மொடு புணர்ந்து நிலம் அமர்வையத்து ஒரு தாம் ஆகி, உயர் நிலை உலகம் இவணின்று எய்தும், அறநெறிபிழையா அன்புடைநெஞ்சின், பெரியோர் மேஎய் இனிதின் உறையும் குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும், (468 - 474) இவ்வடிகள் அந்தணர் பள்ளியைப்பற்றியும், அதிலே வாழ்ந்த அந்தணர்களின் உயர்வைப் பற்றியும் அறிவிக்கின்றன. சமணர்களும், பவுத்தர்களும் துறவு பூண்டு பொதுப்பணி புரிந்ததுபோலவே தமிழ்நாட்டு அந்தணர்களும் துறவுபூண்டு பொதுப்பணி புரிந்துவந்தனர் என்பதை இவ்வடிகள் விளக்குகின்றன. சைவர், வைணவர், சமணர், பவுத்தர் போன்ற பல மதத்தினர் அக்காலத்தில் மதுரையில் வாழ்ந்தனர். ஆயினும் அவர்கள் சண்டை சச்சரவின்றி ஒன்றுபட்டிருந்தனர். மத வெறுப்பும் மதவெறியும் மதச் சண்டையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் தலைகாட்டியதில்லை. இவ்வுண்மையை இந்நூலின் மூலம் உணரலாம். அறங்கூர் அவையம் நீதிமன்றத்திற்கு அறங்கூர் அவையம் என்பது பழந்தமிழ்ப் பெயர். பண்டைத் தமிழர், நீதியிலே நேர்மை காட்டினர். பண்டைக்காலத்தில் நீதி வழங்கிய முறைக்கும், இக்காலத்தில் நீதி வழங்கும் முறைக்கும் வேற்றுமை உண்டு. அக்காலத்தில் உண்மையைக் கண்டறிந்து தீர்ப்புக் கூறினர். இக்காலத்தில் சட்டவரம்பு கடவாமல் தீர்ப்பு கூறுகின்றனர். உண்மையில் ஒருவன் கொலைகாரனாக இருக்கலாம். அவன் கொலை செய்தான் என்பதற்கான சாட்சியங்கள் |