| 124 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
இன்றேல் அவனைத் தண்டிக்க முடியாது. உண்மையில் ஒருவன் குற்றமற்றவனாயிருக்கலாம். அவன் கொலை செய்ததை நேரே பார்த்ததாகக் கூறும் சாட்சிகள் இருந்தால் அவனைத் தூக்கிலே போட்டுவிடலாம். இக்காலத்தில் சட்டமே நீதி; அக்காலத்தில் உண்மையே நீதி. நீதிபதிகளைப்பற்றி இவ்வாசிரியர் கூறியிருப்பதைக் கொண்டு இதனை அறியலாம், “பயத்தையும், துன்பத்தையும், ஆசையையும் விட்டவர்கள்; ஒரு பக்கத்தாரிடம் கோபமும், மற்றொரு பக்கத்தாரிடம் மகிழ்ச்சியும் காட்டாமல், தம் உள்ளத்தை நடுநிலையிலே நிறுத்திக் கொண்டவர்கள்; துலாக்கோலைப் போல் நடுநிலையிலே நிற்பவர்கள்; சிறந்த ஒழுக்கமுடையவர்கள்; இத்தகையவர்கள் நீதிபதிகளாக வீற்றிருந்து நீதி வழங்குகின்ற அறங்கூர் அவையம். அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச், செற்றமும் உவகையும் செய்யாது காத்து, ஞெமன்கோல் அன்ன செம்மைத் தாகிச், சிறந்த கொள்கை அறங்கூர் அவையமும்” (489-492) இவ்வாறு கூறி நீதிபதிகளின் நேர்மையைக் காட்டியிருக்கிறார். அறங்கூர் அவையம்-அறம் தலை சிறந்து நிற்கின்ற சபை. இது நீதி மன்றம். வணிகர்கள் அக்காலத்து வணிகர்கள் அறநெறி, தவறாதவர்கள். நன்னெறியிலே நடப்பவர்கள். வாங்குவதை அதிகமாக வாங்கிக்கொண்டு, கொடுப்பதைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். அவர்களுடைய பரந்த-உயர்ந்த-சிறந்த இல்லத்திலே சிறுசிறு குன்றுகளைப்போலே, பல |