விபசாரம் நிலைத்திருப்பதற்குக் காரணமாயிருந்தனர். பழங்காலத்தில் பெண்ணுரிமையில்லை. பெண்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். ஆண்கள் பல மனைவியரை மணந்து கொள்ளலாம். விலை மாதர்கள் வீட்டுக்கும் போய் வரலாம். இது தவறாக எண்ணப்படவில்லை. இதனாலேயே விலை மாதர், அல்லது கணிகையர், பரத்தையர் என்று சொல்லக்கூடிய ஒரு வகுப்பினர் இருந்தனர். ஆயினும் அறிஞர்கள் விபசாரத்தைக் கண்டித்து வந்தனர். இந்நூலாசிரியரும் மதுரையில் விலைமாதர்கள் வாழ்ந்தனர் என்று சொல்லுவதோடு விட்டுவிடவில்லை. அவர்களின் இயல்பை எடுத்துக்காட்டிப் பொது மக்களுக்கு அறிவுரை சொல்லுகின்றார். “விலைமாதர்கள் மழைக்காலத்திலே மலர்ந்திருக்கும் புதரைப் போலத் தலைநிறையப் பூச்சூடியிருப்பார்கள். வந்தவரை மார்பிலே வடுப்படும்படி அழுந்தத் தழுவிக்கொள்ளுவார்கள். வஞ்சகமான பல பொய் மொழிகளைப் பேசி, வந்தவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவார்கள். தம் உண்மை உள்ளத்தைக் காட்டமாட்டார்கள்; ஒளிப்பார்கள். வெளியூர்க்காரராயினும் சரி, உள்ளுர்க்காரராயினும் சரி, தம்முடைய அழகை விரும்பி வந்த வாலிபர்கள் பலரின் செல்வங்கள் முழுவதையும் பறித்துக் கொள்ளுவார்கள். பின்னர் வண்டுகள் ஒரு மலரில் உள்ள தேனை உண்ட பின், அந்த மலரை விட்டுவிட்டுத் தேனுள்ள வேறு மலரை நாடிச் செல்லுவதுபோல, தம்மைப் புணர்ந்தவர்களின் நெஞ்சம் வருந்தும்படி தூக்கத்திலேயே அவர்களை விட்டுப் பிரிந்து விடுவார்கள்.” இதுவே விலைமாதர்களின் இயல்பு என்று காட்டுகிறார். இதனை |