அணிகலன்கள் செய்து அழகுக்காக அணிந்து கொண்டனர். பொன், வெள்ளிகளால் பாத்திரங்களும் செய்தார்கள். இரும்பு, செம்பு, கலவை உலோகமான முறி முதலியவைகளாலும் கருவிகள் செய்தனர். மரத்தினால் நல்ல வேலைப்பாடமைந்த பண்டங்கள் செய்தனர். உள்நாட்டு வாணிகமும், வெளிநாட்டு வாணிகமும் உயர்ந்திருந்தன. இந்நாட்டுப் பண்டங்கள் பல அந்நிய நாடுகளுக்குக் கடல் வழியாகச் சென்றன. அந்நிய நாட்டுப் பண்டங்களும் இந்நாட்டுக்கு வந்து இறக்குமதியாயின. பிறமொழி பேசுவோர், பிற நாட்டினர், இந்நாட்டுக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தனர். பிற நாட்டினரோடும், பிறமொழியினரோடும் தமிழர்கள் தாராளமாகப் பழகினர். அவர்களும் தமிழர்களுடன் ஒன்றுபட்டுக் கலந்து பழகினார்கள். பிறநாட்டினர் மீது வெறுப்போ, பிறமொழியின் மீது வெறுப்போ அக்காலத்தில் இல்லை. தமிழகத்திலே நல்ல அரசுகள் நிலைபெற்றிருந்தன. அந்த அரசுகளின் தலைவர்கள் சர்வாதிகாரம் படைத்தவர்கள். ஆயினும் அவர்கள் குடிகளின் நன்மையையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடத்தினர்; அவர்கள் எதிர்த்தோர்க்கு எமன்களாகவும், அண்டினோர்க்கு அருமைத் தோழர்களாகவும் விளங்கினர்; கலைஞர்களுக்கும், புலவர்களுக்கும் புகலிடமாக இருந்தனர்; கலைகளையும், கவிதைகளையும் வளர்ப்பதற்குத் துணை செய்தனர். அக்காலத்திலே தமிழ் நாட்டிலே பல கோயில்கள் இருந்தன. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர். சிவபெருமான், திருமால், பலதேவன், முருகன், காளி முதலிய தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன. இன்னும் பல சில்லறைத் தெய்வங்களும் தமிழகத்தில் வாழ்ந்தன. ஆனால் விநாயகர் மட்டும் காணப்படவில்லை. |