பக்கம் எண் :

14பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

அக்காலத்திலே விக்கிரக வணக்கம் உண்டு. இறந்த வீரர்களுக்குக் கல்நட்டு அவர்களைத் தெய்வம் போல் வணங்கி வந்தனர்.

தமிழகத்திலே சமண மதம், பவுத்தமதம், வேதமதம் ஆகியவை பரவியிருந்தன. வேத முனிவர்கள், வேத அந்தணர்கள், சமண சந்நியாசிகள், பவுத்தத் துறவிகள் தங்கள் தங்கள் கொள்கைகளைப் பற்றி மக்களுக்கு விரிவுரையாற்றிவந்தனர். இவர்கள் தங்கியிருந்த இடங்களுக்குப் பள்ளிகள் என்று பெயர். இவர்களுக்குள் எத்தகைய சண்டை சச்சரவுகளும் இல்லை. அக்காலத் தமிழகத்தில் மதங்கள் பல இருந்தன. ஆனால் மதச் சண்டையோ மதவெறுப்போ மக்களிடம் இல்லை.

மறையோதும் அந்தணர்கள் தமிழ் நாட்டிலே மகிழ்ந்து வாழ்ந்தனர்; தெய்வங்களைப் பற்றிய புராண வரலாறுகள் தமிழர்க்குத் தெரிந்திருந்தன. வேள்விகள் நடைபெற்றன; தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் கொண்டாடினர். திருவிழாக் காலங்களிலே தெளிந்த அறிஞர்கள் பலர் கூடுவார்கள். அரும்பொருள்களைப் பற்றி அவர்கள் விவாதிப்பார்கள்.

தமிழர்களிடையிலே பல வகுப்புப் பிரிவுகள் இருந்தன. அப்பிரிவுகள் அவர்கள் செய்யும் தொழில்பற்றியும், வாழும் இடம்பற்றியும் தோன்றியவை. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், வலைஞர், எயினர், கானவர், ஆயர், மறவர், உழவர் போன்ற பிரிவுகள் அவை. இசை, நாடகம் போன்ற கலைகளையே தொழிலாகக் கொண்ட பொருநர், பாணர், கூத்தர் முதலியவர்கள் இருந்தனர்; இவர்கள் செல்வர்களிடம் சென்று ஆடிப்பாடி அவர்கள் கொடுக்கும் பரிசுகளைப் பெற்று உயிர்வாழ்ந்தனர்; இவர்கள் கலைஞர்களாயிருந்தும் சமூகத்தில் தாழ்ந்தவர்களாகவே வாழ்ந்தனர். இவை போன்ற பிரிவுகள் இருந்தும்