| 130 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
கல்லானாலும் மரமானாலும் அவற்றைத் துண்டு செய்கின்ற கூர்மையான வாளை வைத்திருப்பார்கள்; காலிலே செருப்பணிந்திருப்பார்கள்; சிறிய பிடியுள்ள கூர்மையான கத்தியைத் துடையில் மறைத்திருப்பார்கள்; பூவேலைகள் செய்யப்பட்ட நீலநிறக் கச்சையை இடையிலே அணிந்திருப்பார்கள். மெல்லிய நூலேணியைப் பல சுற்றுகளாக இடையிலே சுற்றியிருப்பார்கள்; நிலத்தைத் தோண்டிக் கவ்விப் பிடித்துக்கொள்ளும்படியான வளைவு உளியை அந்த நூலேணியுடன் பிணைத்திருப்பார்கள். செல்வர்கள் வீட்டிலே புகுந்து உயர்ந்த ஆபரணங்களைத் திருட விரும்பி நகரிலே திரிந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் யார் கண்ணிலும் படாமல் தப்பித்துக் கொள்ளும் திறமையுள்ளவர்கள். இவ்வாறு அக்காலக் கள்வரின் உருவத்தை அப்படியே சித்திரித்துக் காட்டுகிறார். இரும்பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு; கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர், தொடுதோல் அடியர். குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச், சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல் நிறம்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்; மென்னூல் ஏணிப்பன்மாண் சுற்றினர், நிலன் அகழ் உளியர்; கலன் நசைஇக் கொட்கும் கண்மாறு ஆடவர் இவ்வடிகள் கள்வர்களின் தோற்றத்தை நம்முன் காட்டுகின்றன. |