இதற்கு அடுத்தாற்போல் ஊரைக் காக்கும் காவலரைப் படம்பிடித்துக் காட்டுகிறார். “மதுரை நகரைக் காக்கும் காவலர்கள் கள்வர்கள் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக இரவு முழுவதும் விழித்துக்கொண்டே திரிகின்றனர். களிற்றைப் பிடிக்க மறைந்து திரியும் புலியைப்போல் அவர்கள் தூங்காமல் இருப்பார்கள். அவர்கள் அச்சமற்றவர்கள், களவுநூல் அறிந்தோர்களால் புகழப்பட்ட அறிவும் வல்லமையும் அமைந்தவர்கள். ஊர் காக்கும் நூலைக் கற்று, அந்த முறையைத் தவறாமல் பின்பற்றி நடக்கும் தேர்ந்த அறிவுடைய ஊர்காப்பாளர்கள்” இவ்வாறு காவலர் திறமையை எடுத்துக்காட்டுகிறார். ஒடுக்கம் ஒற்றி வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல துஞ்சாக் கண்ணர், அஞ்சாக் கொள்கையர், அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர், செறிந்த நூல்வழிப் பிழையா நுணங்கு நுண்தேர்ச்சி ஊர்காப்பாளர். (642-647) இவ்வடிகள் கள்வரைப் பிடிக்க அலையும் காவலரைக் காட்டுகின்றன. அன்னசாலைகள் மதுரையிலே ஏழைகளுக்கு உணவளிக்கும் அன்னசாலைகள் இருந்தன. அந்த அன்னசாலைகளுக்குத் தேன்மணம் கமழும் பலாச்சுளைகள், பலவகைப்பட்ட மாம்பழங்கள், பலவகையான காய்கறிகள், வாழைப்பழம், மழையினால் கொடிகளிலே அழகாக முளைத்திருக்கின்ற இளங்கீரை, அமுதம் போன்ற இனிமையான பல்வகைப் பட்டைச்சாதம், சுவையுடையது |