இந்நூலின் இறுதியிலே பாண்டியனுக்கு வாழ்த்து கூறும் வழியாக வலியுறுத்திக் கூறியுள்ளார் இவ்வாசிரியர். இது குறிப்பிடத்தக்க செய்தியாகும். "அளவோடு நீ அடைந்திருக்கும் வாழ்நாளை இனி வீணாக்காதே! நகைகளை அணிந்த நல்ல மகளிர் பொன்கலத்திலே மணம்வீசும் நல்ல மதுவை ஊற்றித்தர அதனை அருந்தி மகிழ்ந்து அவர்களுடன் எந்நாளும் இனிதுவாழ்க" என்று வாழ்த்தியிருக்கிறார். இதனை இலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணம்கமழ் தேறல்மடுப்ப, நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி! பெரும வரைந்து நீ பெற்ற நல்ஊழியையே. என்ற அடிகளால் காணலாம். இவ்வடிகள் இப்பாட்டின் இறுதியில் உள்ளவை. இன்னும் பல செய்திகள் மதுரைக் காஞ்சியின் தலைவனாகிய நெடுஞ்செழியன் இமயமுதல் குமரிவரையில் உள்ள பரதகண்ட முழுவதையும் ஆண்டான் என்று இந்நூல் கூறுகிறது. "தெற்கே தென்குமரியும், வடக்கே இமயமலையும், கிழக்கே கடலும், மேற்கே கடலும் எல்லையாக உடைய நாட்டினர் அனைவரும் உன்னுடன் கொண்ட பழைய நட்பினைச் சொல்லி உன் ஏவலைச் செய்து வருகின்றனர். எப்பொழுதும் வெற்றியுடனே இணைந்து வாழ்கின்றாய். அரசர்களுக்கெல்லாம் அரசனாக விளங்குகின்றாய்" என்று நெடுஞ்செழியன் பாராட்டப்படுகின்றான். இதனை தென்குமரி, வடபெருங்கல், குண, குட கடலா எல்லைத் |