134 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
தொன்று மொழிந்து தொழில்கேட்ப, வெற்றமொடு வெறுத்து ஒழுகிய கொற்றவர்தம் கோன் ஆகுவை. (70 - 74) என்ற அடிகளால் அறியலாம். வடபெருங்கல் என்பதை வடவேங்கடம் என்று பொருள்கொண்டு தமிழ்நாடு முழுவதையும் ஆண்டனன் என்று சொல்லுவாரும் உண்டு. "வடபெருங்கல்" என்ற சொற்றொடர் குறிப்பிடத்தக்கது. இச்சொல் இமயமலையைக் குறிப்பதேயாகும். அக்காலத்தில் நிலவளம் மிகச்சிறந்திருந்தது. பயிர் வளர்ந்திருக்கும் வயலிலே யானை புகுந்தால் அந்தப் பயிரின் உயரம் யானையின் உருவத்தை மறைத்துவிடுமாம். இதனை களிறுமாய்க்கும் கதிர்க்கழனி (247) என்பதனால் அறியலாம். மலையாளிகளுக்கு ஓணம் பண்டிகையென்பது ஒரு தேசியத் திருவிழா. புத்தாண்டு விழாவைப்போலக் கொண்டாடுகின்றனர். இது திருமாலைக் கொண்டாடும் பண்டிகை. இப்பண்டிகையை அக்காலத்தில் தமிழ்நாட்டினரும் கொண்டாடி வந்தனர். கூட்டமான அவுணரை வெற்றிகொண்ட அழகிய மாலையை அணிந்த திருமாலுக்குரிய திருவோண நன்னாள். கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள் (590 - 591) என்ற அடிகள் இதைத் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் மலையாளமொழி தனிமொழியாக இல்லை; மலையாளிகள் தனி இனத்தினராகவும் இல்லை; இன்றுள்ள மலையாளிகளின் முன்னோர் அன்று தமிழராகவே இருந்தனர்; இன்றுள்ள மலையாளம் அன்று சேரநாடாக இருந்தது என்று எண்ண இது இடந்தருகின்றது. |