பக்கம் எண் :

மதுரைக்காஞ்சி135

அந்தணர்கள் விடியற்காலத்திலே எழுந்து வேதங்களைப்பாடிக் கொண்டிருப்பார்கள்.

ஓதல் அந்தணர் வேதம்பாட                        (656)

அறிஞர்கள் கூடி பல செய்திகளைப்பற்றி ஒருவரோடு ஒருவர் விவாதிப்பார்கள்; இவ்வாறு விவாதிக்கும் ஓசை கேட்டுக்கொண்டேயிருக்கும்.

விழுமியோர் குழீஇ
விழைவுகொள் கம்பலை                     (525 - 526)

மதுரை நகரிலே நாளங்காடி, அல்லங்காடி என்று இரண்டு வகையான வாணிகம் செய்யும் இடங்கள் இருந்தன. நாள் அங்காடி-பகலில் வாணிகம் நடைபெறும் இடம். அல் அங்காடி-இரவில் வாணிகம் நடக்கும் இடம்.

மக்கள் விரும்பும் பலவகையான பண்டங்களையும் மலர்களையும் வீடுகள்தோறும் கொண்டுபோய்ப் பெண்கள் விற்பனை செய்வார்கள்.

தச்சுத்தொழில், இரும்புத்தொழில், நெசவுத்தொழில், சிற்பத்தொழில், ஓவியத்தொழில், உழவுத்தொழில் போன்ற பல தொழில்கள் உயர்ந்த நிலையிலிருந்தன.

தொழில் காரணமாக அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் முதலிய பல பிரிவுகள் இருந்தன. ஆயினும் அவர்கள் எவ்வித வேற்றுமையும் இன்றி ஒன்றுபட்டு ஒரே குலமாக வாழ்ந்தனர். இவைபோன்ற இன்னும் பல செய்திகளை இந்நூலிலே காணலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ் நாட்டின் பெருமையையும் தமிழர்கள் பண்பாட்டையும் அறிய இந்நூல் ஒரு சிறந்த கருவி.