8. நெடுநல்வாடை இது பத்துப்பாட்டுள் ஏழாவது பாட்டு. 188 அடிகளைக்கொண்டது. ஆசிரியப் பாவால் ஆகியது. நெடுநல்வாடை என்பதற்கு நீண்ட நல்ல வாடைக்காற்று என்பது பொருள். வாடை-குளிர்காற்று; வடக்கிலிருந்து வீசுவது வாடைக்காற்று. தெற்கிலிருந்து வீசுவது தென்றற்காற்று; கொண்டல்-கீழ்க்காற்று; கோடை, மேல்காற்று, மழைக்காலத்தில்தான் வாடைக்காற்று வீசும். யாரும் குளிர் காற்றை விரும்புவதில்லை. மக்களும் வெறுப்பர்; விலங்குகளும் பறவைகளும் வெறுக்கும். மழையும் குளிரும் உள்ள காலத்தில் மக்கள் ஒருவேலையும் செய்ய முடியாமல் மனச் சோர்வடைவர். குளிருக்கு அடக்கமான இடம் பார்த்து அடைந்து கிடப்பர். ஏனைய உயிர்களும் இப்படித்தான்; அவைகள் குளிர் பொறுக்காமல் எங்கேனும் சந்து பொந்துகளிலே பதுங்கிக் கிடக்கும். இப்படிப்பட்ட வாடைக்கு நல்வாடை என்று பெயர் கொடுத்துள்ளார் இவ்வாசிரியர். கணவனைப் பிரிந்து தனித்திருக்கும் காதலிக்கு இக்குளிர்காலம் நீண்டதாகத் தோன்றுகின்றது; முடிவற்றதாகக் காணப்படுகிறது. காதலியைப் பிரிந்து போர்க்களத்திலே புகுந்து கடமையாற்றும் காதலுனுக்கு வெற்றி கிடைக்கிறது. அவன் சோர்ந்து கிடக்காமல் சுறுசுறுப்புடன் பாசறையிலே சுற்றித் திரிகின்றான். |