பக்கம் எண் :

நெடுநல்வாடை137

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் வைத்துதான் இந்நூலுக்கு நெடுநல்வாடையென்ற பெயரை இந்நூலாசிரியர் அமைத்தார். காதலிக்கு நீண்டதாகவும், காதலனுக்கு வெற்றியைத் தருவதாகவும் உள்ள வாடைக்காற்றை நெடுநல்வாடையென்று கூறியது பொருத்தமான பெயர்.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் நக்கீரனார். மதுரைக் கணக்காயனார் மகனார் என்னும் தமிழ்ப்புலவர் இவரேதான். பத்துப்பாட்டில் முதற்பாட்டாகிய திருமுருகாற்றுப்படையின் ஆசிரியரும் இவரேதான். திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியிலே இவரது வரலாற்றுக் குறிப்பு கூறப்பட்டுள்ளது.

திருமுருகாற்றுப்படை, முருகனைத் தலைவனாக வைத்து பாடப்பட்டது. இந்நூல் ஓர் அரசனைத் தலைவனாக வைத்துப் பாடப்பட்டது. நக்கீரனாரின் சிறப்பைப்பற்றி-புலமையைப்பற்றி-நாம் சொல்லவேண்டியதில்லை. "நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே" என்று சொல்லிப் பரமசிவனாருடன் வழக்காடினார் என்று இவரைப்பற்றி வழங்கும் வரலாறு ஒன்றே இவர் பெருமைக்குப் போதுமானதாகும்.

பாட்டின் தலைவன்

நெடுநல்வாடையின் தலைவனும் பாண்டியன் நெடுஞ்செழியனேதான். மதுரைக்காஞ்சியின் தலைவனாகிய நெடுஞ்செழியனும், இவனும் ஒருவனே.