பலர் என்பதற்கும் பாசறை என்பதற்கும் இவ்வாறே பொருள் கொண்டார். ஆகவே "வேம்பு தலையாத்த" என்னும் குறிப்பைக் கொண்டும், "பலரொடு முரணிய பாசறை" என்ற குறிப்பைக்கொண்டும் நெடுநல்வாடையின் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்தான் என்று தெரிந்து கொள்ளலாம். பாட்டின் அமைப்பு விடாமல் மழை கொட்டுகிறது; சீறிச்சீறி வாடைக் காற்று வீசுகின்றது; இடையர்கள் தங்கள் ஆடுமாடுகளை மேட்டு நிலத்தை நோக்கி ஓட்டிக்கொண்டு ஓடுகின்றனர். மரம், செடி, கொடிகள் மழையால் வாட்டம் தீர்ந்து வளர்கின்றன. நகரத்தின் வீதிகளிலே குடிகாரர்களைத் தவிர வேறு யாரும் நடமாடவில்லை. பெண்கள், சிறு சண்பகப்பூ மலர்வதைக் கண்டுதான் அந்தி நேரம் வந்துவிட்டது என்று அறிந்து கொள்ளுகின்றனர். வீடுகளில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒழுங்காக நடைபெறவில்லை. எல்லாரும் வாடையால் நடுங்கிக் கிடக்கின்றனர். போருக்குப் போன மன்னன் திரும்பி வராமையால், அந்தப்புரத்திலே அரசன் மனைவி, கட்டிலிலே வருந்திக் கிடக்கின்றாள். ஏவல் மகளிர் எவ்வளவுதான் சமாதானம் கூறினாலும் அவள் உள்ளத்திலே சாந்தி பிறக்கவில்லை. இந்நிலையிலே ஒருத்தி தெய்வத்தை வேண்டிக் கொள்ளுகின்றாள். வேந்தன் போரை முடித்து வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்பது அவளுடைய வேண்டுகோள். |