பல பகுதிகள் இருக்கும்படி அமைப்பார்கள்" என்று கூறுகிறார் நக்கீரர். இதனை ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து, நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டுத், தேஎங்கொண்டு. தெய்வம் நோக்கிப், பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து:        (75 - 78) என்ற அடிகளைக் கொண்டு அறியலாம்.  கோட்டைவாயில் இக்காலத்திலும் பழமையான நகரங்கள் பலவற்றிலே பண்டைக்காலக் கோட்டை வாயில்களைப் பார்க்கின்றோம். அவைகள் அகலமாகவும், உயரமாகவும் அமைந்திருக்கின்றன. கோட்டைவாயில்களுக்கு மேலே கோபுரம் கட்டும் வழக்கம் இல்லை. வாயிலின் மேற்பாகத்தை மாடவீடுகளாக அமைத்திருக்கின்றனர். இதுவே கோட்டை வாசலின் அமைப்பாகும். பண்டைக்காலத்தில் அரண்மனையைச் சுற்றிய கோட்டைவாயில் எப்படி அமைக்கப்பட்டது என்பதை இந்த நெடுநல்வாடையிலே காணலாம்.  "இரட்டைக்கதவுகள்; நல்ல வேலைப்பாடமைந்தவை; உட்புறம் தாழ் போடும்படி செய்யப்பட்டவை. வேலைத்திறம் மிகுந்த தச்சனால் நன்றாக இணைத்து இடுக்கில்லாமல் செய்யப்பட்டவை; வாசல்கால் உயரமாக இருக்கும்; அது வெண்சிறு கடுகும், எண்ணெயும் பூசி வணங்குகின்ற தெய்வ உருவத்தைக் கொண்டதாக இருக்கும். வெற்றிக்கு அடையாளமாக உயர்த்தியிருக்கின்ற கொடியுடன் யானைகள் தாராளமாக நுழைந்து போகும்படியான உயரமுள்ள வாசல். குன்றிலே குடைந்து தொளையிட்டது போலக் காணப்படும் வாசல்" என்று இவ்வாறு அரண்மனைக் கோட்டை வாசலைக் காட்டுகின்றது இந்நூல்.   |