பக்கம் எண் :

142பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

தாழொடு குயின்ற போரமை புணர்ப்பின்
கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து,
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை,
வென்றெழு கொடியொடு வேழம்சென்றுபுகக்
குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாசல்;             (84 - 88)

இவ்வடிகள் கோட்டை வாசலின் அமைப்பைக் காட்டுகின்றன.

அரசனுடைய அந்தப்புரம்

அரசனும் அரசியும் தனித்துறையும் பகுதிக்கு அந்தப்புரம் என்று பெயர். அரண்மனையின் அந்தப்புரக் கட்டடங்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இவ்வாசிரியர் விளக்கியிருக்கின்றார். "அந்தப்புரத்திலே அரசனைத் தவிர வேறு ஆடவர்கள் போக முடியாது. அணைந்த விளக்கைக்கூட அரசன் தான் கொளுத்த வேண்டும்" இத்தகைய தனித்த அந்தப்புரக் கட்டடங்களைப் பார்த்தால் நாம் வியப்படைவோம்.

"அந்தப்புரக் கட்டடங்கள் மலைகளைப்போல உயர்ந்த தோற்றமுடையன. மலைகளின் மேல் மழைக்காலத்து இந்திர வில் ஒளிவிடும் காட்சியைப்போல், அக்கட்டடங்களின் உச்சியிலே பல நிறமுள்ள கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. பலவிடங்களிலும் வெள்ளியைப் போல விளங்கும் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கின்றது. நீல மணியைப்போன்ற கருமையும் திரட்சியும் உடைய வலிமையான கருங்கற்றூண்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன; அவைகள் செம்பினால் செய்யப்பட்டது போன்று உறுதியானவை. சுவர்களிலே சித்திர வேலைப்பாடுகளும் அமைந்திருக்கின்றன. அழகிய பல மலர்கள் பூத்த கொடிகளும் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த அந்தப்புரத்திற்குக் "கருவில்" என்று பெயர். இவ்வாறு காணத்தக்க இனிமையும் அழகும் அமைந்து விளங்கியது அந்த நல்ல இல்லம்"