பக்கம் எண் :

நெடுநல்வாடை143

வரைகண் டன்ன தோன்றல, வரைசேர்பு
வில்கிடந்தன்ன கொடிய, பல்வயின்
வெள்ளியன்ன விளங்கும் சுதையுரீஇ
மணிகண்டன்ன மாத்திரள் திண்காழ்ச்,
செம்பு இயன்றன்ன செய்வுருநெடும்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பின் நல்இல்              (108 - 114)

இவ்வடிகள் அந்தப்புரத்தை நமக்குக் காட்டுகின்றன. "கருவில்" என்ற பெயரையே பிற்காலத்தினர் "கர்ப்பகிரகம்" என்ற பெயரால் அழைத்தனர்.

போர்க்களத்திலே மன்னர்கள்

பண்டைத் தமிழ் மன்னர்கள் போர்க்களத்திலே நேரடியாகப் பங்குகொண்டார்கள். இக்காலத்தில் போர்வெறியர்கள் கூலிப்படையை எதிரிகளின்மேல் ஏவி விடுவதைப்போல் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் பாசறையிலே தங்கியிருக்கும்போது போரிலே அடிபட்ட வீரர்கள் ஒவ்வொருவரையும் நேரே போய்ப் பார்ப்பார்கள். அடிபட்டு வருந்தும் அவர்களுக்கு ஆறுதல்மொழி புகல்வார்கள். போர் வீரர்களுடன் அன்புடன் நண்பர்களாகப் பழகுவார்கள். இது பண்டைத்தமிழ் மன்னர்களின் தன்மை.

விளக்கு வெளிச்சத்திலே-வேப்பம்பூமாலையணிந்து வேலாயுதத்தையும் ஏந்தியிருக்கின்ற படைத்தலைவன்-காயம்பட்ட வீரர்களை வரிசை வரிசையாகக் காட்டுகின்றான். மன்னன் அவர்களைப் பார்த்து ஆறுதல் மொழிகளைக்கூறிக் கொண்டுவருகின்றான். இச்சமயத்தில் மழையும் பெய்துகொண்டேயிருக்கிறது. மணி பூண்டிருக்கும் யானை-அலங்காரம் களையப்படாத குதிரை-இவைகள் சேற்று நிலத்திலே நின்றுகொண்டு தம்மீது வீழுந்த மழைத்துளிகளை உதறுகின்றன.