| 144 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
அந்த நீர்த்துளிகள் அரசன் மேல் தெறிக்கின்றன. அரசன் தன்தோளிலே அணிந்திருக்கும் அழகிய துகில் வாடைக் காற்றால் நழுவி விழுகின்றது. அதனை இடதுபக்கத்திலே அணைத்துப் பிடித்துக்கொண்டான். வாளைத் தோளிலே கட்டித் தொங்கவிட்டிருக்கின்ற வலிமைபொருந்திய வீரஇளைஞன் ஒருவனுடைய தோள்மீது கையைப் போட்டுக்கொண்டான். மகிழ்ச்சியுடன் மற்றொரு வீரன், தவ்தவ்வென்ற ஓசையுடன் விழும் மழைத்துளி, மன்னன் மேல் படாமல் மறைக்கும்படி வெண்கொற்றக்குடையைப் பிடித்துக்கொண்டு வந்தான். மன்னன் இவ்வாறு நள்ளிரவிலே கூடப் பள்ளி கொள்ளாமல் சிலருடன் சேர்ந்து பாசறையிலே சுற்றிக்கொண்டிருந்தான். வேம்புதலையாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறைகாட்டப், பின்னர் மணி புறத்திட்ட மாத்தாட்பிடியொடு பருமம்களையாப் பாய்பரிக்கலிமா இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப், புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ, வாள்தோட்கோத்த வன்கட்காளை சுவல்மிசை அமைத்தகையன், முகன் அமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தள்ளென்று அசைஇத் தாதுளி மறைப்ப, நள்ளென்யாமத்தும் பள்ளிகொள்ளான் சிலரொடு திரிதரும் (176 - 187) இவ்வடிகள் தமிழ் மன்னன்-பாண்டியன் செயலைப் பாராட்டிக் கூறுகின்றன. போர்வீரர்களை எப்படி உற்சாக மூட்டுவது என்ற கலையைத் தமிழரசர்கள் நன்றாக அறிந்திருந்தனர் என்பதை இதனால் அறியலாம். |