ஆர்கலி முனைஇய, கொடுங்கோல் கோவலர், ஏறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப், புலம் பெயர் புலம்பொடு கலங்கி; (3 - 5) என்ற அடிகள் காட்டுகின்றன. பெண்கள் மாலைக் காலத்திலே விளக்கேற்றி வைப்பார்கள்; நெல்லையும் மலரையும் தூவி அவ்விளக்கொளியை வணங்குவார்கள். இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக்கொளீஇ, நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது (42 - 43) என்ற அடிகள் இச்செய்தியைக் காட்டுகின்றன. அக்காலத்தில் சந்தனக் கற்கள் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. "வடவர் தந்த வான்கேழ் வட்டம்" (51) என்பதனால் இதனை அறியலாம். வான்கேழ் வட்டம் என்பது சந்தனக்கல். கோடைக்காலத்தில் குளிர்ந்த தண்ணீரைக் குடிக்க விரும்புவோர் வாய் குறுகலான மண்பாண்டத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கின்றனர். இதைப்போன்ற மண்கூஜாக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் தமிழ்நாட்டில் செய்யப்பட்டன. கோடை நாளில் அவைகளில் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொண்டு அருந்துவார்கள். இந்த மண் கூஜாவை "தொகுவாய்க் கன்னல்" (65) என்ற தொடரால் காணலாம். தொகுவாய்க் கன்னல் சிறிய வாயையுடைய நீர்ப்பாண்டம். யானைத் தந்தத்தால் கட்டில்கள் செய்வார்கள். நாற்பது வயது முடிந்து தாமே இறந்துபோன யானைகளின் தந்தங்களைக் கொண்டு கட்டிலின் கால்களைச் செய்வார்கள். |