பக்கம் எண் :

  

9. குறிஞ்சிப்பாட்டு

இது பத்துப்பாட்டுள் எட்டாவது பாட்டு. இதன் அடிகள் 261. இதுவும் ஆசிரியப்பாவால் ஆகியதே.

குறிஞ்சித்திணையைப் பற்றிச் சொல்லுவது குறிஞ்சிப்பாட்டு. மலையும், மலையைச் சேர்ந்த நிலமும் குறிஞ்சி நிலம். குறிஞ்சி நிலத்திலே, வாழ்ந்த மக்கள் பின்பற்றி வந்த ஒழுக்கத்தை இப்பாட்டு விரித்துக் கூறுகின்றது.

மலைப்பாங்கிலே அதாவது குறிஞ்சி நிலத்திலே மணப்பருவமுள்ள ஒருவனும் ஒருத்தியும் முதன் முதலில் சந்திப்பார்கள். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்வர்; கள்ளத்தனமாக வாழ்க்கை நடத்துவர். இதுவே குறிஞ்சி ஒழுக்கமாகும்.

ஆசிரியர்

இந்நூலை இயற்றியவர் கபிலர் என்னும் பெரும்புலவர். இவர் தமிழ்நாட்டு அந்தணர் மரபைச் சேர்ந்தவர்.

இவர் பறம்பின் தலைவன்-கடையெழுவள்ளல்களில் ஒருவன்-மூவேந்தர்களும் கண்டு பொறாமை கொண்ட புகழுள்ளவன்-பாரி என்பவனுடைய உயிர்த்தோழர். பாரி உயிரோடிருக்கும் வரையிலும் அவனோடு இணை பிரியாமல் வாழ்ந்து வந்தார். மூவேந்தர்களின் சூழ்ச்சியால் பாரி