சிறுநூலையும் இவர் தலையிலே சுமத்துவர். இவைகளுக்கும் சங்கநூல் பாடல்களைப் பாடிய கபிலருக்கும் சம்பந்தமில்லை. பாரியின் உயிர்த்தோழனாக புலன் அழுக்கற்ற அந்தணாளனாகப் புகழ்பெற்று வாழ்ந்த கபிலர் வேறு. பிற்காலத்துக் கதைகளுக்கான கபிலர் வேறு. பாட்டின் தலைவன் இக்குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகதத்தன் மீது பாடப்பட்டது என்று கூறுகின்றனர். "ஆரிய அரசன் பிரகதத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டிற்கு மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று." என்று நக்சினார்க்கினியர் உரையின் முடிவிலே காணப்படுகின்றது. ஆரிய அரசன் பிரகதத்தன் மீது பாடப்பட்டது என்பதற்கு இதைத் தவிர வேறொரு சான்றும் கிடைக்கவில்லை. குறிஞ்சிப்பாட்டின் அடிகளிலே ஆரிய அரசனைப் பற்றியோ, பிரகதத்தனைப் பற்றியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஓர் அடியோ, ஒரு சொல்லோ காணப்படவில்லை. இந்த ஆரிய அரசன் யார்? இவன் இருந்த இடம் எது? இவன் செய்த காரியம் என்ன? என்பவைகளைப் பற்றிய வரலாறு ஒன்றுமேயில்லை. ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன், என்ற ஓர் அரசன் பெயர் குறுந்தொகையிலே காணப்படுகின்றது. குறுந்தொகையின் 184 வது பாட்டு இவனால் பாடப்பட்டது. இவன் தமிழ்ப் புலவனாகவும், தமிழ்ச் செய்யுளியற்றும் திறமையுள்ளவனாகவும் இருந்திருக்கின்றான். பாண்டிய நாட்டில் திருக்குற்றாலத்தையுள்ளிட்ட ஒரு பகுதி ஆசிய நாடென்ற பெயருடன் இருந்ததாகத் தெரிகின்றது. எக்காலத்திலோ தமிழ் நாட்டிற்கு வந்த ஆரியர்கள் இரண்டாயிரம் |