என்று கூறினான். அவள் நெற்றியைத் துடைத்தான். என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான். இச்சமயத்தில் நாங்கள் அந்த இடத்தை விட்டு நீங்க வழிபார்த்தோம். அவன் எங்களைப் போக விடவில்லை. தலைமகளைத் தன் மார்புடன் தழுவிக்கொண்டான். "உன்னை என்னுடைய இல்லக்கிழத்தியாக ஏற்றுக் கொள்ளுவேன்" என்றான். "உன்னைப் பிரியமாட்டேன்" என்று மலையுறை தெய்வத்தின் முன்னிலையிலே உறுதி கூறினான்; அந்த மலையில் இனிய அருவி நீரை அள்ளி அருந்தி ஆணையிட்டான். இதற்குள்ளே மாலைக் காலம் வந்துவிட்டது. "இன்னும் சில நாட்களில் உம் சுற்றத்தார் சம்மதம் பெற்றுத் திருமணம் செய்துகொள்வோம்; அதுவரையிலும் மனங்கலங்காமல் பொறுத்திருங்கள்" என்று ஆறுதல் மொழிகள் கூறினான். பிறகு எங்களுடன் துணையாக வந்து எங்களை ஊருணிக் கரையிலே விட்டுச் சென்றான். அவன் நள்ளிரவிலே வந்து போய்க் கொண்டிருக்கின்றான். தலைவியின் தழுவுதலை அவன் பெறமுடியாவிட்டாலும், தவறாமல் வருகின்றான். அவன் நல்லொழுக்கமுள்ளவன்; செல்வமிக்க நற்குடியில் பிறந்தவன். அவன் இவ்வாறு இராப்போதிலே வந்து போதல் நன்றன்று; மணந்து கொண்டு மனையறம் புரிதலே நன்று; என்று தலைவி கவலைப்படுகின்றாள். அவன் இராப்போதிலே காடுகளையும் நீர் நிலைகளையும் கடந்து வரவேண்டும். காடுகளிலே கொல்லும் விலங்குகள் குடிகொண்டிருக்கும். நீர் நிலைகளிலே முதலைகள் உண்டு. வழியிலே பேய் பிசாசுகளும் உண்டு. இந்த ஆபத்துக்களையெல்லாம் தாண்டி அவர் இரவிலே வருகின்றாரே என்று எண்ணிக் கண்ணீர் விடுகின்றாள். இதுதான் அவளுடைய நோய் |