உண்மையைச் சொல்லி அவளைத் தேற்றினான். பின்னர் "அழகிய மலையிலிருந்து வரும் இனிய அருவிநீரை அள்ளிப் பருகினான்" என்று கூறப்பட்டிருப்பதைக் கொண்டு தெய்வத்தின் முன்னே நின்று ஆணையிடும் வழக்கம் அக்காலத்தில் உண்டென்று அறியலாம்.  மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது, ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி, அம்தீம் தண்ணீர் குடித்தலின்;                (209 - 211) இவ்வடிகள் இவ்வழக்கத்தைக் காட்டுகின்றன.  ஒழுக்கத்தின் உயர்வு ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. அதனைக் காத்துக்கொள்ளுதல் ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும். கெட்டுப்போன ஒழுக்கத்தைத் திரும்பப் பெற முடியாது. இதனை உதாரணத்துடன் விளக்கிக்கூறுகின்றது இந்நூல் "முத்து, இரத்தினம், பொன் இவைகளால் இழைக்கப்பட்ட அணிகலன் எவ்வளவு கெட்டுப் போனாலும் மீண்டும் அதனைச் சீர் செய்து கொள்ளலாம். ஆனால் நல்ல தன்மையும், பெருமையும், நல்லொழுக்கமும் நாசமடைந்துவிட்டால், அந்த நாசத்தைத் திருத்தி மீண்டும் புகழ்பெற முடியாது. குற்றமற்ற அறிவுள்ள பெரியோர்களாலும் இந்நிலையை அடைய முடியாது. இவ்வாறு முன்னோர்களான அறிஞர்கள் மொழிந்தனர்."  முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துண நோவருங் குறைய கலங்கெடிற் புணரும்.  சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறுகாட்சி ஐயர்க்கும் அந்நிலை எளியவென்னார், தொன்மருங்கு அறிஞர்;            (13--18)   |