| 158 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |  
 
 இவ்வடிகளால் ஒழுக்கத்தை எவ்வளவு உயர்வாகத் தமிழர்கள் மதித்தனர் என்பதைக் காணலாம்.  சமாதானம் செய்வோர் நிலை சண்டை பிடிப்பது எளிது. சும்மாயிருப்பதுகூட எளிதுதான். ஆனால் சண்டைபோட்டுக் கொள்ளும் இருவருக்குள் சமாதானத்தைப் புகுத்துவது மிகவும் கடினமான வேலை. இருவரிடமும் அவர்கள் மனம் நோகாமல், அவர்களுடைய சினம் தணியும் வகையிலே பேசவேண்டும், இனிமையாகவும், திறமையாகவும் பேசினால்தான் மாறுபட்ட இருவரைச் சமாதானம் செய்துவைக்க முடியும். சமாதானம் செய்துவைப்பதில் அனுபவம் உடையோர்க்கு இவ்வுண்மை தெரியும்.  மும்முரமாகப் போர் புரிந்துகொண்டிருக்கின்ற இரண்டு பேரரசர்களுக்கிடையிலே புகுந்து அவர்களைச் சமாதானம் பண்ணி வைக்க முயலும் அறிஞர்களைப்போல இகல்மீக்கடவும் இருபெரு வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போல          (27--28) என்று கூறிச் சமாதானம் செய்து வைப்பதில் உள்ள சங்கடத்தை விளக்கியிருக்கிறார் இவ்வாசிரியர்.  மறுபிறப்பிலே நம்பிக்கை மீண்டும் பிறப்புண்டு. இவ்வுலகத்தைத் தவிர இன்ப துன்பங்களை அனுபவிக்கக்கூடிய வேறு உலகங்களும் உண்டு. இத்தகைய நம்பிக்கை பழங்காலத் தமிழர்களிடம் இருந்தது.  காதலன் தனக்கு வாக்களித்தபடி மணந்துகொள்ள வராததைக் கண்ட காதலி "இப்பொழுது நம்மை அவர் மணந்து கொள்ளாவிட்டாலும் மறு உலகத்திலாயினும்   |